“எகிப்தியர் அடிமைகொள்கிற இஸ்ரவேல் புத்திரரின் பெருமூச்சையும் நான் கேட்டு, என் உடன்படிக்கையை நினைத்தேன்”. யாத்திராகமம் 6:5
நமது விண்ணப்பங்கள் முகவரி இல்லாத தபால்கள் போன்று தேவசமுகத்திற்குப் போய் சேராமல் திரும்பி வந்துவிடுகின்றன என்று நம்மில் பலர் வேதனைப்படுகிறோம். இரவுபகல் என்று எந்நேரமும் விண்ணப்பங்கள் செய்தும் பலன் இல்லையே! என்று அங்கலாய்க்கிறோம். எகிப்தில் இஸ்ரவேல் மக்கள் கொடுமைக்கு உள்ளானபோது, அவர்களின் கூக்குரலைக் கர்த்தர் கேட்டு, அவர்களை மீட்டு அழைத்து வந்தார்.
”உமக்குப் பிரியமானதைச் செய்ய எனக்குப் போதித்தருளும்” என்று தாவீது விண்ணப்பித்ததை ஆண்டவர் கேட்டு அவனுக்கு மறு உத்தரவு அருளினார். அது போன்று நாம் கர்த்தருக்குக் கீழ்ப்படிந்து, அவர் சித்தப்படி நடக்கிறோமா? அவர் நமது விண்ணப்பத்தைக் கேட்கிறவர்.
நீதிபதி ஒருவரிடம் தனது வழக்குக் குறித்து நீதி வழங்கும்படி விதவைப் பெண் விடாப்பிடியாய் கேட்டுக் கொண்டிருந்தாள். அந்த நீதிபதி நேர்மையற்றவர் என்றாலும், அந்தப் பெண்ணின் தொந்தரவு தாங்காமல் நீதி வழங்கினார் என்று லூக்கா 18:5 ல் வாசிக்கிறோம். நேர்மையற்ற நீதிபதி ஒருவர் அந்தப் பெண்ணுக்கு செவிகொடுத்து நீதி வழங்கினார் என்றால்,நமது விண்ணப்பத்திற்கு தேவன் நியாயம் செய்யாமல் இருப்பாரோ? விடாமுயற்சியுடன் ஜெபித்தால், நிச்சயம் நாம் வெற்றி பெறுவோம்.
“உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக் கொள்கிறதற்கு முன்னமே, உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்”. (மத்தேயு.6:8) அதனால்தான், “தேவனாகிய ஆண்டவரை ஜெபத்தினாலும், விண்ணப்பங்களினாலும் தேட என் முகத்தை அவருக்கு நேராக்கி …….(தானி.9:3) என்று தானியேல் கூறுகிறார்.
இயேசுவே, உம்மையே நம்பி வாழும் என்னைக் கரம்பிடித்து வழி நடத்தும்! ஆமென்.