அழகான அத்திமரம்

அதில் இலைகளையல்லாமல், வெறொன்றையும் காணவில்லை. மாற்கு 11:13

அன்றையத்தினம், இயேசு பெத்தானியாவிலிருந்து எருசலேமுக்கு வந்தார். பெத்தானியா எருசலேமுக்குத் தென்கிழக்கே 2 மைல் தூரத்திலிருந்தது. இந்த இடத்திற்கு இயேசு அடிக்கடி போவதுண்டு. கடந்த இரவிலே இவ்வூருக்குச் சென்ற இயேசு யாருடைய வீட்டிலும் தங்காமல், மலைப் பகுதிகளில் தங்கி தியானம் செய்து கொண்டிருந்தார் என்று தோன்றுகிறது. அதினாலேதான் அவருக்கு மறுநாள் காலையில் பசியுண்டாயிற்று. அந்த பசியினால் தூரத்தில் நின்ற ஒரு அத்திமரத்தண்டை போய், ஆசையோடு  அண்ணாந்து பார்த்து, அதன் கிளைகளில் கனியைத் தேடினார். அத்திமரத்தில் முதலில் இலைகளிருந்தபடியால். கனிகளும் இருக்குமென எண்ண இடமிருந்தது நியாயமானதே. ஆனால் அதில், பின் கனியுமில்லை: முன் கனியுமில்லை. எனவே இயேசு. இனி ஒருக்காலும் உன்னிடத்தில் கனி உண்டாகாதிருக்கக்கடவது என்றார்.

அவர் மரத்தை சபித்ததற்குக் காரணம் பசியுமல்ல. கோபமுமல்ல. சர்வ ஜனத்திற்கும் பெரிய எச்சரிப்பாக அதைச் செய்தார். நன்மை செய்கிறவராக சுற்றித் திரிந்த இயேசுவே, நியாயாதிபதியாகவும் வருவார் என்பதை இது காட்டுகிறது. ஆண்டவர் நம்மில் விரும்புகிறது இலைகள் அல்ல; கனிகளே. இயேசு எருசலேம் ஆலயத்தைச் சுத்திகரித்தார். அப்போதுள்ள யூத மார்க்கத்தின் தொழுகை முறையை குற்றஞ்சாட்டுகிறவராய் இருந்தார். அவர் செய்த ஊழியத்தில் இது உச்சகட்டமாக நடைபெற்றது.

தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது. நீங்களே அந்த ஆலயம். ஆம். ஆலயமாகிய உங்கள் சரீரம் பரிசுத்தமாயிருக்கிறதா? தேவனை பிரியப்படுத்தும் வாழ்வு உங்களிடம் உண்டா?

பார்க்க மிகவும் அழகாக இருந்தது அத்திமரம், இயேசு கனியைத் தேடினார்; ஒன்றுமே இல்லை, ஏமாற்றம். அன்பரே வாழ்க்கையில் உம் இயேசு கனியை காண்பாரா? இல்லை உன் வாழ்க்கை இயேசுவுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்துகிறதா?

உம்மில் நிலைத்திருந்து கனிகொடுக்கும் வாழ்க்கை வாழ உதவி செய்யும். ஆமென்.